கருப்பு கவுனி அரிசி கஞ்சி நன்மைகள் & செய்முறை: உடல் எடையை சல்லென்று குறைக்கும் ராஜ உணவு!
## கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன?
நாம கடைல சாதாரணமா வாங்கற வெள்ள அரிசி, பச்சரிசி பாத்திருப்பீங்க. ஆனா கருப்பு நிறத்தில் ஒரு அரிசி பாத்திருக்கீங்களா? அதுதான் கருப்பு கவுனி அரிசி. பாக்கும்போதே ஒரு மாதிரி வித்தியாசமா, மர்மமா, ஸ்பெஷலாக இருக்கும் கருப்பு கவுனி அரிசி, உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல்தான்.
மகாராஜாக்கள் மட்டும் சாப்பிடும் "எம்பரர் ரைஸ்" (Emperor's Rice) என்று இந்த அரிசிக்கு ஒரு பட்டப்பெயரே உள்ளது . ஏன் என்றால் அந்தக்காலத்துல கருப்பு கவுனி அரிசி சாதாரண மக்களுக்கு கிடைக்கும் ஒன்று இல்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த அரிசியை தடைசெய்யப்பட்ட அரிசி ("forbidden rice") என்றும் சொல்றாங்க.
தமிழ்நாட்டுல, குறிப்பா செட்டிநாடு மக்களிடம் இந்த அரிசிக்கு அந்தக்காலம் முதல் ஒரு தனி இடம் இருக்கு. செட்டிநாடு குடும்பங்கள்ல முன்காலத்தில எல்லாம் இந்த கவுனி அரிசியை வச்சு ஒரு 'ஸ்பெஷல்' இனிப்பு (கவுனி அரிசி ஸ்வீட்) செய்யும் இருக்கிறது. மேலும், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பண்டிகை நாட்கள் மற்றும் விசேஷ சமயங்களில். வருடங்கள் செல்ல செல்ல, கவுனி அரிசியை இனிப்புக்கு மட்டுமில்லாமல், தினசரி சாப்பிடக்கூடிய ஒரு கஞ்சியாக இந்த அரிசியை சமைக்கிற பழக்கம் பரவலாக உள்ளது. ஏன் என்றால், இந்த அரிசி நாவுக்கு ருசியாக மட்டுமல்லாமல், உடலுக்கும் நல்லது அப்படின்னு பிற்பாடு தெரியவந்தவுடன் இதை தினசரி உணவிலும் மக்கள் சேர்க்க ஆரம்பிதுவிட்டார்கள் என்பதே உண்மை.
நாம் இப்போது சாதாரண வெள்ளை அரிசிக்கும் இந்த கருப்பு அல்லது அடர் ஊதா நிறமுடைய கவுனி அரிசிக்கும் இடையே என்னென்ன வித்தியாசங்கள் உள்ளது என்று பார்ப்போம். முதலாவதாக, கருப்பு கவுனி அரிசிக்கு இந்த நிறம் வர காரணம் "anthocyanin" என்ற ஒரு இயற்கை நிறமி (pigment). இதே இயற்கை நிறமிதான் நீல பெரி அல்லது ப்ளூபெரி, ஊதா நிற முட்டைக்கோஸ் (purple cabbage) ஆகியவற்றில் காணப்படும் அதே நிறமிதான் கவுனி அரிசியிலும் உள்ளது. இந்த நிறமியால் ஏற்பட்ட இந்த கருப்பு ஊதா நிறமே உடலுக்கு "ஆரோக்கியத்தைத் தரக்கூடிய ஒன்று தான். இந்த நிறமி சாதாரண வெள்ளை அரிசியில் இல்லை. மேலும் இந்தக் கவுனி அரிசியானது பொதுவாகவே கொஞ்சம் கடினமாக இருக்கும், அதோடு வேகவைக்கவும் நிறைய நேரம் பிடிக்கும் — ஆனால் வெள்ளை அரிசியைக் காட்டிலும் அதிகமான சத்துக்கள் கவுனி அரிசியில் உள்ளது. கவுனியில் உள்ள சத்துக்கள் என்ன என்ன என்று பார்ப்போம்.
## கருப்பு கவுனி அரிசியின் சத்துக்கள்
முதலாவதாக, **புரத சத்து (Protein)**. சாதாரண வெள்ள அரிசியைக் காட்டிலும் கவுனி அரிசியில் புரதம் அதிகமாக உள்ளது என்று உணவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளார்கள். இது தசைகள் ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் உதவும்.
இரண்டாவதாக, இரும்புச்சத்து (Iron). மிகவும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து முக்கியம். இரும்பு சத்து குறையும்போது இரத்த சோகை (anemia) ஏற்படும். அப்படி இரத்த சோகை உள்ளவர்கள் கவுனி எடுப்பது அவர்களுக்கு ஆரோக்கிய தீர்வாக இருக்கும்.
அடுத்ததாக முக்கியமாக சொல்லவேண்டும் என்றால், கவுனியில் மிகுதியாக நிறைந்திருக்கும் **ஃபைபர் (Fibre)** எனப்படும் நார் சத்து தான். இது நம் வயிற்றின் செரிமான மண்டலத்துக்கு மிகவும் முக்கியம். நார் சத்து அதிகமா இருந்தால் வயிறு உடனடியாக நிறைந்ததுபோல உணர்வு வருவதால் அதிகமாக சாப்பிடுவது குறையும் என்பதால் கவுனி அரிசி உடல் எடை கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது.
மேலும், கவுனி அரிசியில **ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்** (antioxidants*) அதிகமாக உள்ளது, முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் **ஆந்தோசயனின்** (anthocyanin) என்பது ஒரு வகை. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம்ம உடம்புல உள்ள "ஃப்ரீ ரேடிக்கல்கள் (free radicals)" என்று சொல்லப்படும் நிலையற்ற அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் (கேன்சர் போன்ற விளைவிக்கும் இந்த செல்களை "சுதந்திரமான தீவிரவாதி" செல்கள் என்றும் சொல்லலாம்) ஆகும். அப்படிப்பட்ட தீங்கு விளைவிக்குற செல்களை எதிர்த்து போராடும் குணம் ஆந்தோசயனின்-க்கு உள்ளது. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் அதிகரித்தால் "உடலில் oxidative stress" எனப்படும் ஒரு மாதிரியான உடல் உறுப்புகளின் "உள் சேதத்தை" குறைக்க ஆந்தோசயனின் உதவும். மேலும், மனிதர்களின் வயதாகிற வேகத்தை, மேலும் சில நோய்கள் வரக்கூடிய சாத்தியத்தையும் இது குறைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் கருப்பு கவுனியில் சாதாரண அரிசியை விட அதிக சத்துக்கள் உள்ளது என்பதுதான்.
## கவுனி அரிசி கஞ்சியின் ஆரோக்கிய பயன்கள்
### நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுமா?
பொதுவாக மக்கள் கேட்கிற ஒரு முக்கியமான கேள்வி இதுதான். கவுனி அரிசியின் **Glycemic Index (GI)** என்ற சர்க்கரை அளவீட்டின் குறியீடு குறைவா இருக்கும் காரணம் அதில் உள்ள அதிகப்படியான நார்சத்து தான். அதாவது, GI அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும். ஆனால், GI குறைவாக உள்ள உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, சர்க்கரை அளவு மெதுவாக படிப்படியாகவே ரத்தத்தில் அதிகரிக்கும் என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல செய்திதான்.
அதற்காக சர்க்கரை மருந்து டாக்டர் சொல்வதுபோல் எடுத்துக்கொள்ளாமல் கவுனி கஞ்சி மட்டும் சாப்பிடலாம் என்று யாரும் நினைக்கக்கூடாது. ஏனெனில், கருப்பு கவுனியை ஒரு துணை உணவாக மட்டுமே உணரவேண்டும். டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்தை இதற்காக நிறுத்துதல் கூடாது என்பதை முக்கியமான அறிவுரையாகக் கொள்ளவேண்டும்.
### எடை குறைப்பில் கவுனி அரிசி உதவுமா?
இதற்கு முன்பே நாம் பார்த்தோம் கவுனி அரிசியில் நார்சத்து என்கிற ஃபைபர் அதிகமாக உள்ளதால் நாம் இதை உட்கொண்டவுடன் வயிறு நிறைந்த முழுமையான உணர்வு ஏற்படுவதால் நிறைய சாப்பிடுவது குறைந்து கொஞ்ச கொஞ்சமாக எடை குறைவு ஏற்பட்ட உதவுகிறது. ஏனெனில் அடிக்கடி சாப்பிடவேண்டும் என்ற உணர்வு குறைவதும் மற்றும் தேவைக்கு மேல் சாப்பிடுவதும் தானாகக் குறையும் என்பதே எடை குறைவு ஏற்பட காரணம். முக்கியக்குறிப்பு: கவுனி அரிசி எடை கட்டுப்பாட்டுக்கு உதவியாக இருக்கும், ஆனால் உடற்பயிற்சி மற்றும் சரியான சாப்பாட்டு டயட் முறையோட சேர்ந்தே இது ஒர்க் அவுட் ஆகும் என்பதை மறக்கக்கூடாது.
### செரிமான மண்டல ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
கவுனி அரிசி கஞ்சி குடித்தபிறகு வயிறுக மிகவும் லேசாக இருக்கும் (சரியாக ஊறவைத்து வேகவைக்கவேணும் என்பது குறிப்பிடத்தக்கது). எனவே ஒருகாலத்தில் சிறுகுழந்தைகள், வயதானவர்களுக்கும், உடல்நிலை சரியில்லாதவர்களுக்கும் கவுனி கஞ்சியை முதலில் கொடுப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் வயிற்றுக்கு பாரமாக இல்லாமல், எளிதில் ஜீரணிக்கும், மேலும் நார்சத்து வயிற்றின் இயக்கத்தையும் (bowel movement) சீராக வைக்க உதவும்.
அதோடு மட்டுமில்லாம, இதற்கு முன்னால் நாம் பார்த்த ஆன்தோசயனின் என்ற antioxidants சத்து நோய் எதிர்ப்பு சக்தியை (immunity) உடலில் மேம்படுத்த உதவும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது உடலில் உள்ள தீமையை ஏற்படுத்துகிற கிருமிகளை எதிர்த்து அழித்து, உடலைப் பாதுகாக்குற வேலையைத்தான் இது செய்கிறது.
## கவுனி அரிசி கஞ்சி செய்முறை (Step-by-step)
இப்போது நேரடியாக எப்படி கவுனி கஞ்சி செய்வது என்று பார்ப்போம். இது சமைப்பதற்கு ஒரு எளிமையான ரெசிபி ஆகும், ஆனால் நினைவில் கொள்ளவேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கவுனி அரிசி சற்றே கடினமான அரிசி என்பதால் இதை ஊறவைப்பதற்கு நேரம் கொடுக்கவேண்டும் என்பதே.
### தேவையான பொருட்கள்
- கவுனி அரிசி — 1/2 கப்
- வெங்காயம் (சின்ன வெங்காயம் நல்லது) — 5-6
- பூண்டு — 4-5 பற்கள்
- பச்சை மிளகாய் — 1 அல்லது 2
- கறிவேப்பிலை — சில
- வெந்தயம் — 1/4 ஸ்பூன்
- சீரகம் — 1/2 ஸ்பூன்
- மிளகு — 1/4 ஸ்பூன்
- உப்பு — தேவைக்கேற்ப
- மோர் அல்லது தயிர் — சாப்பிடும்போது சேர்ப்பதற்காக
*(இனிப்பு கஞ்சி வேண்டுமென்றால்: மேலே சொல்லப்பட்ட சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவைகளைத் தவிர்த்து — அதற்கு பதிலாக பால், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்)*
### கவுனி அரிசி ஊறவைக்கும் மற்றும் அரைக்கும் முறை
கவுனி அரிசியை நன்றாக இரண்டு மூன்று முறை கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும். அதோடு குறைந்தது 2 மணி நேரம் அல்லது இயன்றால் இரவு முழுக்க ஊற வைக்கலாம். கவுனி அரிசி பொதுவாக வேக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் இந்த ஊறவைக்குற ஸ்டெப்பை தவிர்க்காமல் இருப்பது மிகவும் முக்கியம்.
ஊறின கவுனி அரிசியை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக (coarse) அரைதுக்கொள்ளவேண்டும் (நைசாக அரைக்க வேண்டாம். ஏனெனில் கொரகொரப்பாக இருந்தால் மட்டுமே கஞ்சிக்கு நல்ல டெக்ஸ்சர் (texture) மற்றும் சுவை கிடைக்கும்.
### சமைக்கும் முறைகள் - ஸ்டெப் பை ஸ்டெப்:
1. கொரகொரப்பா அரைத்த கவுனி அரிசியை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் விடவேண்டும்.
2. இதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், மிளகு எல்லாம் சேர்க்கவேண்டும்.
3. பிறகு நன்றாகக் கலந்துவிட்டு, குக்கரை மூடி, நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக விடவேண்டும்.
4. விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்துவிடவேண்டும். ஆவி தானாக வெளியேற விடவேண்டும். உடனே குக்கர் மூடியை திறக்கவேண்டாம்.
5. குக்கர் ஆறியபிறகு, மூடியைத் திறந்து ஒரு தடவை நன்றாகக் கிளறவேண்டும்
6. கஞ்சி கொஞ்சம் ஆறியபிறகு, மோர் அல்லது கடைந்த தயிர் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு கன்சிஸ்டென்சி சரி செய்யவேண்டும்.
### இனிப்பு கஞ்சி vs உப்பு கஞ்சி
மேலே நாம் பார்த்தது **உப்பு போட்ட கஞ்சி** முறை. இப்போது **இனிப்பு கஞ்சி செய்முறை** பார்ப்போம்
1. சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்றவை சேர்க்காமல், வெறும் கவுனி அரிசியை மட்டும் வேகவிடவேண்டும்.
2. அரிசி வெந்தவுடன் அதனுடன்பால் சேர்க்கவேண்டும் (தண்ணீருக்கு பதிலாக பால் சேர்க்கலாம் அல்லது அல்லது தண்ணீருடன் பால் கலந்தும் சேர்க்கலாம், அது உங்கள் விருப்பம்).
3. சர்க்கரை அல்லது வெல்லம் தேவைக்கு சேர்க்கவேண்டும்.
4. முக்கியமாக, இனிப்பு கஞ்சியில் மோர் அல்லது தயிர், உப்பு, மிளகு எதுவும் சேர்க்கவேண்டாம்.
உப்பு கஞ்சி மற்றும் இனிப்பு காஞ்சி இரண்டுமே வித்தியாசமான சுவைகளில் சிறப்பாக இருக்கும்.
## கவுனி சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை
### தினமும் எவ்வளவு சாப்பிடலாம்
கவுனி அரிசி கஞ்சி ஆரோக்கியமான உணவுதான் என்றாலும் அளவுக்கு அதிகமா சாப்பிடுவது சரியல்ல. வாரத்துக்கு 4 அல்லது 5 தடவை, ஒரு வேளை உணவா (காலை உணவு அல்லது இரவு லேசான உணவு) சாப்பிடுவது நல்லது. தினமும் மூணு வேளையும் கவுனி அரிசி மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலா, மற்ற உணவுகளோட இதை மாற்றி மாற்றி சேர்க்கும்போது சமநிலையான உணவுமுறை என்பது அமையும். இதுவே நல்லது.
### யாருக்கு ஏற்றது / யாருக்கு கவனம் தேவை
பொதுவா குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எல்லாருக்கும் இது ஏற்றது. இருந்தாலும் சாப்பிட்ட பிறகு வயிறு லேசாக ஆகும் என்பதால் சில விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
- **நீரிழிவு நோயாளிகள்: கவுனி அரிசிக்கு ** GI குறைவு என்று சொன்னாலும், ஒவ்வொருவர் உடலிலும் வேறு வேறு மாதிரி react செய்யும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்பு டாக்டர் கூட ஒரு தடவை ஆலோசித்துக்கொள்வது நல்லது.
- **சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்:** புரதம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். எனவே இதுபற்றியும் டாக்டரை கேட்டுக்கொள்வது நல்லது.
- **கர்ப்பிணிப் பெண்கள் / பாலூட்டும் தாய்மார்கள்:** பொதுவா கவுனி பாதுகாப்பான உணவுதான், ஆனாலும் புதிதாக ஏதாவது உணவை ஆரம்பிக்கும் முன்னர், எப்பொழுதும் மருத்துவர் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.
**முக்கிய குறிப்பு:** இந்த கட்டுரை பொது தகவலுக்காக மட்டும் தரப்பட்டிருக்கிறது. இது மருத்துவ ஆலோசனை அல்ல. உங்களுக்கு ஏதாவது ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், அல்லது ஏற்கெனவே மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் கவுனியை உணவில் சேர்க்கும் முன்னர் டாக்டரை கலந்தாலோசித்துக்கொள்ளவேண்டும்.
கருப்பு கவுனி அரிசி என்பது வெறும் ஒரு "ட்ரெண்டிங் சூப்பர்ஃபுட்" இல்ல — இது நம்ம தமிழ் மண்ணின் , குறிப்பாக செட்டிநாட்டு பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ள ஒரு உணவு. முன்காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிட்ட அரிசி என்று சொல்லப்பட்டது இது, தற்காலத்தில் எல்லாருடைய அன்றாட உணவிலும் எளிதாக சேர்க்கக்கூடிய ஒரு ஆரோக்கிய உணவாக மாறியிருக்கிறது.
புரதம், இரும்புச்சத்து, நார்சத்து, அந்தோசியனின் என்ற antioxidants ஆகிய நிறைய நல்ல சத்துக்கள் நிறைஞ்ச இந்த அரிசி, கஞ்சி வடிவில் சாப்பிடும்போது வயிறுக்கு லேசாகவும், சுவையாகவும் இருக்கும். நீரிழிவு, எடை குறைப்பு, செரிமானம்னு பல விஷயங்களுக்கு கவுனி அரிசி உதவும்னு சொல்லப்பட்டாலும், அளவோட, சரியான முறையில சாப்பிடுறதுதான் முக்கியம்.
வீட்டில் ஒரு தடவை இந்த கவுனி அரிசி கஞ்சியை செய்து பாருங்கள். உப்பு கஞ்சியாக இருந்தாலும், இனிப்பு கஞ்சியாக இருந்தாலும், அது நிச்சயமாக உங்கள் குடும்பத்துக்கு ஒரு நல்ல, ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும்.
**உங்கள் வீட்டில் கவுனி அரிசி கஞ்சி எப்படி செய்வீர்கள்? உங்களுக்கு உப்பு கஞ்சி பிடிக்குமா, அல்லது இனிப்பு கஞ்சி பிடிக்குமா? கமெண்ட் செய்யுங்க!** உங்கள் டிப்ஸ் இன்னும் நிறைய பேருக்கு உபயோகமாக இருக்கும்.




Comments
Post a Comment